கலிபோர்னியா: ஒரு வழியாக கூகுளின் மிகப் பெரிய லட்சியம் நனவாகப் போகிறது. இதுவரை ஆண்ட்ராய்ட் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஆண்டி ரூபின் அந்தப் பொறுப்பிலிருந்து விலகி விட்டார். இதையடுத்து அந்தப் பொறுப்புக்கு தமிழரான சுந்தர் பிச்சை வருகிறார். இவர் தற்போது கூகுளின் குரோம் வெப் பிரவுசரைக் கவனித்து வருபவர் ஆவார். மேலும் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டமும் இவர் வசம்தான் இருக்கிறது.
இனிமேல் ஆண்ட்ராய்டையும் இவரே சேர்த்துப் பார்க்கப் போவதால் கூகுளுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கப் போகிறது. அதாவது மொபைல் போன்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆண்ட்ராய்டுடன் கூகுள் குரோமும் இணைந்து இரட்டிப்பு பலனைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
2004ம் ஆண்டு முதலே ஆண்ட்ராய்ட் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்தை கவனித்து வந்தவர் ரூபின். ஆண்ட்ராய்ட் பொறுப்புக்கு வரும் சுந்தர் பிச்சை, குரோமையும் தொடர்ந்து பார்த்து வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பர்சனர் கம்ப்யூட்டர்களும், மொபைல் போன்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பாதையில்தான் பயணித்து வருகின்றன. இதற்குக் காரணம் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள சில தொழில்நுட்பப் பிரச்சினைகள்தான். ஆனால் தற்போது ஆண்ட்ராய்டும், கூகுள் குரோமும் கை கோர்த்துள்ளதால் இந்த வேறுபாடு நீங்கி இரண்டும் ஒரே பாதையில் பயணிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
2011ம் ஆண்டில் கூகுள் செயல் தலைவர் எரிக் ஸ்மித், ஒரு நாள் ஆண்ட்ராய்டும், குரோமும் ஒன்று கலக்கும் என்று கூறியிருந்தார். தற்போதுதான் அது நிறைவேறும் வாய்ப்பு வந்துள்ளது. தற்போது பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்ட் பின்னணியில்தான் இயங்குகின்றன. அதேசமயம், கூகுளின் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டம் பிரபலமாக இருந்தபோதிலும், மொபைல் போன்களில் அது வெற்றி பெறாமலேயே இருக்கிறது.
இந்த பிரச்சினைக்கு தற்போது பெரும் தீர்வு காணும் வாய்ப்பு சுந்தர் பிச்சை ரூபத்தில் வந்துள்ளது. ஒரு கையில் ஆண்ட்ராய்ட் இன்னொரு கையில் குரோம் என்று தாங்கிப் பிடிக்கப் போகும் அவர் இரண்டையும் ஒரே கைக்குள் அடக்கி மொபைல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.