எஸ்.எம்.எஸ். மூலம் வானிலை அறிக்கை விபரங்களை பெறும் புதிய திட்டம் வருகிற ஜூலை மாதம் முதல் செயல்படுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் முடிவெடுத்துள்ளது.
புயல் மழை காலங்களில் வானிலை ஆய்வு மையம் சார்பில் வானிலை அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இதை மேலும் நவீனப்படுத்தவும், துரிதமாக மக்களைச் சென்றடையவும் இந்திய வானிலை ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது.
கடைசியாக சென்னை நகரை நிலம் புயல் தாக்கியபோது வானிலை எச்சரிக்கை காரணமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பொருட்சேதமும் இல்லை. அதேபோல் கடலூரை லைலா புயல் தாக்கியபோது உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
வானிலை அறிக்கை தகவலை துரிதப்படுத்தும் விதமாக எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மழை காலங்களில் நாம் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியில் செல்ல வேண்டும் அல்லது வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், அப்போது வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டுமா?. உடனே நம்மிடம் உள்ள செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் உடனே வானிலை அறிக்கை நமது செல்போனுக்கு வந்து விடும். அதை ஓபன் செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதற்காக செல்போனில் இந்தியா வெதர் என்ற புதிய இணையதளம் ஆரம்பிக்கப்படும். எஸ்.எம்.எஸ்.சில் வானிலை அறிக்கையை படித்து பார்த்து மழை பெய்யும், அல்லது பெய்யாது என தெரிந்து கொண்டு பயண திட்டத்தை வைத்துக் கொள்ளலாம். மழையில் சிக்கி அவதிப்படும் நிலை ஏற்படாது.
இந்த வசதி டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் வருகிற ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வருகிறது. இந்த சேவையை இலவசமாக வழங்குவதா? அல்லது கட்டண சேவையாக வழங்குவதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இணைய தளத்தின் மூலம் அடுத்த 3 மணி நேரத்துக்கு வானிலை அறிக்கையும் மாவட்ட அளவில் மழை அளவு விவரங்கள் தெரிந்த கொள்ளும் சேவை தொடங்கப்பட உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 224 இடங்களில் தானியங்கி வானிலை மையங்கள் தொடங்க சென்னை வானிலை ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதில் 161 மையங்கள் அடுத்த 3 மாதங்களில் நிறுவப்படும்.
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.